தாய்மை-குழந்தை பராமரிப்பு

குழந்தைகள் அழுவதற்கான காரணங்கள்

குழந்தைகளின் அழுகை பசியை மட்டுமல்ல, வேறு பல விஷயங்களையும் உணர்த்தும். எதற்காக அழுகின்றன என்பதை கண்டுபிடித்தால் மட்டுமே, அவைகளின் அழுகையை நிறுத்தமுடியும்! விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று அழுதால், அதற்கு தூக்கம் தேவையாக இருக்கும். தோளில்கிடத்தி தட்டிக்கொடுத்தால் சில நிமிடங்களிலேயே தூங்கிவிடும்.

இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று அழுவதற்கு துணிகள் ஈரப்பதமாக இருப்பதும் காரணமாக இருக்கும். சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடைகள் ஈரமாகிவிடும்போது அதை தெரியப்படுத்துவதற்காக அழும். குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்றால் அதன் வாயில் விரலை வைத்தவுடன் சப்ப தொடங்கிவிடும். அதை வைத்தே கண்டு பிடித்துவிடலாம்.



பச்சிளம் குழந்தைகளுக்கு திரவ உணவுகளையே கொடுக்க வேண்டும். திட உணவுகளை கொடுப்பதாக இருந்தால் அதனை நன்கு மசித்து தர வேண்டும். திட உணவுகள் கொடுக்கும்போது தண்ணீர் கொடுக்கவேண்டியது மிக அவசியம். அப்போதுதான் உணவு நன்றாக ஜீரணமாகும். வெளி இடங்களுக்கு குழந்தைகளை தூக்கி செல்லும்போது அந்த சூழல் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பீறிட்டு அழும். வழக்கத்தைவிட அதிகமான சத்தத்தையோ, இரைச்சலையோ கேட்டாலும் குழந்தை அழுதுவிடும்.

குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக பால் அல்லது திட உணவுகளை கொடுத்தால் வயிறு உப்பி, அந்த அவஸ்தையாலும் அழும். சாப்பிடும்போது வயிற்றுக்குள் காற்று அதிகமாக உட்புகுந்துவிடுவதும் அழுகைக்கு காரணமாக இருக்கும். ஆதலால் திட, திரவ ஆகாரங்களை சாப்பிட்டதும் தோளில் போட்டு ஏப்பம் வெளியேறும் வரை முதுகை தட்டிக்கொடுக்க வேண்டும்.

பருவகாலநிலைக்கு ஏற்ப குழந்தைகளுக்கு ஆடை அணிவிக்க வேண்டும். அழகாக இருக்கிறது என்பதற்காக அதிக எடைகொண்ட செயற்கை ஆடைகளை அணிவிக்கக்கூடாது. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகள் குழந்தைகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். கூடுமானவரை காட்டன் துணிகளையே உடுத்த வேண்டும். ஆடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வாக இருக்கவேண்டும்.

உடல்நிலை சரியில்லாதபோது குழந்தைகள் சரிவர பால் குடிக்காது. அடிக்கடி அழுதுகொண்டிருக்கும். வழக்கமான அழுகை சத்தத்தில் இருந்து அது வேறுபடும். குழந்தை அழுதுகொண்டிருக்கும் சமயத்தில் தொட்டிலில் போட்டு ஆட்டுவதை தவிர்க்கவேண்டும். அது குழந்தைக்கு களைப்பையும், சோர்வையும் உண்டாக்கும். அரவணைத்து தோளில் கிடத்தி தட்டிக் கொடுத்து தூங்கவைக்க வேண்டும்.



குழந்தையின் சருமத்தில் அரிப்போ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் அதனை அழுது வெளிப்படுத்தும். பெரும்பாலும் குழந்தைகள் அழுகை மூலம்தான் தங்கள் தொந்தரவுகளை வெளிப்படுத்தும். அதனை புரிந்து கொண்டு பெற்றோர் செயல்பட வேண்டும். சளி, இருமல், வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் குழந்தையின் அழுகுரலில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

வயிற்றுப்போக்கால் அவதிப்படும் குழந்தைகள் வலியால் அழுது துடிக்கும். உடலில் நீர்ச்சத்து வெளியேறுவதால் நாக்கு வறண்டு தாகத்திற்காகவும் அழும். அப்போது குழந்தையை டாக்டரிடம் கொண்டுசென்றுவிடவேண்டும். சில மருந்துகள் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாது. வாந்தியோ, குமட்டலோ வருவது போலிருக்கும். அதனாலும் குழந்தை மருந்து சாப்பிட மறுத்து அழுது அடம்பிடிக்கும். அந்த சமயங்களில் டாக்டர்களிடம் ஆலோசித்து மாற்று மருந்து கொடுக்கலாம்.

குழந்தைகள் எப்போதும் தாயின் அருகாமையையும், அரவணைப்பையும் எதிர்பார்க்கும். தங்களை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அழுகையின் மூலம் வெளிப்படுத்தும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker