எடிட்டர் சாய்ஸ்

இணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது?

இன்றைய இளைய தலைமுறையினரின் முன்னால் நிற்கின்ற மாபெரும் சவால் டிஜிட்டல் யுகத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதுதான்.

இன்றைய இளைய தலைமுறையினரின் முன்னால் நிற்கின்ற மாபெரும் சவால் டிஜிட்டல் யுகத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதுதான். இணைய பயன்பாட்டின் போது மிகுந்த எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுரைகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவற்றையும் மீறி சில வேளைகளில் நமது ஆபாசப் படமோ, அல்லது ஆபாசமாய் மார்பிங் செய்யப்பட்ட படமோ இணையத்தில் வரும் வாய்ப்புகளும் உண்டு.

அப்படி ஒரு அதிர்ச்சிச் சிக்கல் நம் முன்னால் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

முதலில் பதற்றத்தையும், பயத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும். உலகம் என்ன நினைக்கும், உறவினர்கள் என்ன நினைப்பார்கள், நமது பெயர் கெட்டுபோய் விடுமே என்பது போன்ற சிந்தனைகள் எதுவுமே தேவையற்றவை. வருகின்ற பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் எனும் மனநிலை தான் முதல் தேவை. நாம் தவறான முடிவெடுத்தால் தான் நமது பெயர் எல்லோருக்கும் தெரியவரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலில் வருவது அச்சுறுத்தலாக இருந்தால், கொஞ்சமும் பயத்தை வெளிப்படுத்தாமல் பேசவேண்டியது மிக மிக அவசியம். நமது பயம் தான் எதிராளியின் ஆயுதம். உங்கள் புகைப்படத்தையோ, வீடியோவையோ, உரையாடலையோ இணையத்தில் பதிவு செய்வேன், சமூக ஊடகங்களில் பகிர்வேன் என யாராவது மிரட்டினால் துணிச்சலாய் பேசுங்கள். இப்படிப்பட்ட பகிர்வுகள், மிரட்டல்கள் எல்லாமே சட்ட விரோதம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

டிஜிட்டல் மிரட்டல் வந்தால் அவற்றை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வையுங்கள். குரலில் மிரட்டல் வந்தால் அதை ரிக்கார்டு செய்து வையுங்கள். அந்த நபரைத் தெரிந்தால் அவரைப் பற்றிய தகவல் களைச் சேமியுங்கள். முதலில் காவல்துறையில் வழக்கு பதிவு செய்வேன் என சொல்லுங்கள். மீண்டும் மிரட்டல் தொடர்ந்தால் சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்யுங்கள்.

ஒரு வேளை உங்களுக்கு மிரட்டல் ஏதும் வராமலேயே உங்களுடைய படம் ஏதேனும் தளத்தில் பதிவானாலும் பயப்படத் தேவையில்லை. எல்லா வலைத்தளங்களுக்கும் ஒரு “காண்டாக்ட்” பகுதியும், மின்னஞ்சலும் இருக்கும். அனுமதியற்ற உங்களின் புகைப்படம் அவர்களுடைய பக்கத்தில் இருப்பதை ஸ்கிரீன் ஷாட் போன்ற ஆதாரங்களுடன் அவர்களுக்கு சமர்ப்பியுங்கள். விதிமீறல் நடந்திருக்கிறது என்பதை ‘அப்யூஸ்’ பகுதியில் விளக்குங்கள். சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு முன் படத்தை முற்றிலுமாக அழிக்க கேட்டுக் கொள்ளுங்கள்.

வீடியோ தளங்களிலும் உங்களுடைய வீடியோக்களை பதிவுசெய்திருந்தால், அது அனுமதியற்ற, சட்ட விரோதமானது என்பதை விளக்கி கடிதம் எழுதுங்கள். அது நிச்சயம் நீக்கப்படும். நீக்கப்படாவிடில் சைபர் கிரைமில் உடனடியாக வழக்கு பதிவு செய்யுங்கள். இன்றைக்கு சைபர் கிரைம் துறை வலுவடைந்திருப்பதால் இத்தகைய சட்ட விரோத விஷயங்களை எளிதில் எதிர்கொள்ள முடியும்.

இப்போது தொழில் நுட்பத்தின் மூலமாக போட்டோ செர்ச் (தேடுதல்), வீடியோ செர்ச் செய்து உங்களுடைய படங்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து விடவும் முடியும். ‘கேம்பைண்ட்’ போன்ற பல ஆப்களும் இந்த பணியைச் செய்கின்றன. தவறான இடங்களில் இருந்தால் அதை நீக்க நடவடிக்கை எடுங்கள்.

இத்தகைய படங்கள், வீடியோக்களை இணையத்திலிருந்து அழிக்கவும், அவை ‘தேடுதல்’ களில் வராமலும் இருக்கவும் கூகுள் உதவும் என அந்த நிறுவனம் 2015-ம் ஆண்டு அறிவித்திருந்தது கவனிக்கத்தக்கது. கூகுளின் ரிவர்ஸ் கூகுள் இமேஜஸ் ஆப்ஷன் இதற்கு உதவும். ஒரு வேளை பேஸ்புக்கில் இருந்தால் பேஸ்புக்குக்கு தகவல் கொடுங்கள், போட்டோ மேட்டிங் டெக்னாலஜி மூலம் அது அகற்றப்படும் என்கிறது பேஸ்புக் நிறுவனம்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அனுப்பிய புகைப்படமாக இருந்தாலும் கூட உங்கள் அனுமதியில்லாமல் ஒருவர் அதை பிற இடங்களில் பகிர்வது சட்டத்தை மீறும் செயல். எனவே இத்தகைய சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் விட சிறந்தது வருமுன் காப்பது என்பதையும் மறக்க வேண்டாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker