சமையல் குறிப்புகள்

சுரைக்காய் பாயாசம்

நீர்ச்சத்து நிறைந்த காய்கறியான சுரைக்காயின் மூலம் சத்தான சுவையான பாயாசம் எப்படி தயாரிக்கலாம் என்று விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • சுரைக்காய் – 1 (சிறியது)
  • தண்ணீர் – 2 கப்
  • நெய் – 1/2 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • பால் – 1/2 லிட்டர்
  • சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

சுரைக்காயை தோலுரித்து நைசாக துருவிக் கொள்ள வேண்டும்

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி, துருவிய சுரைக்காயை அதில் போட்டு 2-3 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும். (சுரைக்காயை துருவிய உடன் சீக்கிரமே தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். இல்லையென்றால் கருப்பு நிறத்தில் மாறி விடும்). சிறிது நேரத்தில் தண்ணீரை வடிகட்டி விட்டு சுரைக்காயை தனியாக எடுத்து விடவும்.

அடுப்பில் கனமான பாத்திரத்தில் சூடான பால் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

மற்றொரு அடுப்பில் வேறு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி, முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும். அதனுடன் வடிகட்டி வைத்த சுரைக்காயை போட்டு நன்றாக கிளறவும்.

பால் நன்றாக கொதித்ததும் அடுப்பில் உள்ள சுரைக்காயை அதனுடன் சேர்க்கவும்.

பின்னர் சர்க்கரையை சேர்த்து கரையும் வரை கிளறவும். அதனுடன் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் உலர்ந்த பழங்கள், எசன்ஸ், குங்குமப்பூ சேர்க்கலாம்.

Show More

Related Articles

Close