தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைகளுக்கு நினைவுத்திறனை வளர்க்கும் எளிமையான பயிற்சிகள்

குழந்தைகளுக்கு நினைவுத்திறனை வளர்க்கும் எளிமையான பயிற்சிகள்

பள்ளிகள் தொடங்கி பாடங்கள் வேகம்பிடிக்கத் தொடங்கிவிட்டன. பாடங்களை திட்டமிட்டபடி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் தங்கள் பணியில் கவனமாக இருப்பார்கள். ஆனால் அதே வேகத்தில் பாடங்களை எழுதுவதும், படிப்பதும் சில மாணவர்களுக்கு கடினமாக இருக்கலாம். நீங்களும் படித்த பாடங்களை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வழியிருக்கிறது. நினைவுத்திறனை பயிற்சியின் மூலம் அதிகரிக்க முடியும். அதற்கான சில எளிய வழிகளை அறிவோமா…

முதலில் உங்கள் நினைவுத்திறனை சோதிக்கும் சிறு பயிற்சி…

தமிழ்ப் பத்திரிகை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு நீண்ட செய்தியை எடுத்துக் கொண்டு அறிவைக் குறிக்கும் ‘அ’, ‘றி’, ‘வு’ என்ற எழுத்துக்கள் வருவதை வட்டமிட்டுக் குறியுங்கள். இப்போது மீண்டும் நீங்களாகவே அந்தச் செய்தியைப் படித்து எந்தெந்த இடங்களில் அந்த எழுத்துகளை வட்டமிடாமல் விட்டிருக்கிறோம் என்பதைக் கவனியுங்கள். மற்றொருவர் துணையுடனும் நீங்கள் சரியாக அனைத்தையும் வட்டமிட்டிருக்கிறீர்களா? என்று பரிசோதிக்கலாம். ஒரே முறையில் நீங்கள் அனைத்து அ, றி, வு என்ற எழுத்துகளை மறக்காமல் வட்டமிட்டிருந்தால் நீங்கள் நினைவுத்திறனில் கெட்டியாக இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.



நீங்கள் ஒரு சில எழுத்துகளை வட்டமிட மறந்திருக்கிறீர்களா, பரவாயில்லை ரகம். நிறைய எழுத்துகளை வட்டமிட தவறியிருந்தால் உங்கள் நினைவுத் திறனை கண்டிப்பாக கீழ்வரும் பயிற்சிகளை கடைப்பிடித்து மேம்படுத்த வேண்டும்.

இதோ நினைவுத்திறனை வளர்க்கும் எளிமையான பயிற்சிகள்…

ஞாபக சக்திக்கு காரணமாக இருப்பது மூளை. அந்த மூளையை சுறுசுறுப்பாக இயக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கி, எப்போதைய நிகழ்வையும் எளிதாக நினைவுக்கு கொண்டுவந்துவிடும். சரி… வாகனத்துக்கு பெட்ரோல் போல, மூளைக்கு பெட்ரோல் எது தெரியுமா? ஆக்சிஜனும், குளுக்கோசும்தான். மூளைக்கு ஆக்சிஜன் நிறைய கிடைக்கும்போது, குளுக்கோஸை சக்தியாக மாற்றி நன்கு இயங்குகிறது.

சரி மூளைக்கு ஆக்சிஜன் நிறைய கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? மூச்சுப் பயிற்சிதான் எளிய வழி. யோகா முறையில் இதை பிராணயாம பயிற்சி என்பார்கள். இந்த பயிற்சியை செய்வதும் எளிதுதான், முதலில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். இப்போது மூச்சை ஆழமாக இழுத்து நிதானமாக வெளியிடுங்கள். பத்து அல்லது இருபது முறை இப்படி செய்துவிட்டு, பிறகு ஒற்றை நாசித் துவாரத்தை மூடிக் கொண்டு மற்றொரு நாசியின் வழியே காற்றை உள்ளிழுத்து, மெதுவாக வெளியிடவும். இதுபோல சில முறைகள் செய்தபிறகு, அந்த துவாரத்தை மூடிக்கொண்டு பின்னர் மற்றொரு துவாரம் வழியே மூச்சுப் பயிற்சி செய்யவும்.

மாணவர்கள் தினமும் காலையில் 20 நிமிடம், மாலையில் 20 நிமிடம் இந்தப் பயிற்சியை செய்தால் மூளைக்கு போதுமான அளவில் ஆக்சிஜன் கிடைத்து சுறுசுறுப்பாக செயல்படும். உடலும் புத்துணர்ச்சியுடன் இயங்குவதை காண்பீர்கள். தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்துவர மாற்றங்களை நீங்களே உணர முடியும்.

பிராணயாமம் போலவே மற்றொரு விளையாட்டு பயிற்சியும் நினைவுத் திறனை வளர்க்கும். இந்தப் பயிற்சியை நீங்கள் பூச்சொல்லி விளையாடுதல் அல்லது வேறு பெயரில் நீங்கள் அறிந்திருக்கலாம். அதையே எண்களோடு சேர்த்து பயிற்சி செய்து நினைவுத் திறனை மேம்படுத்தும் பயிற்சி இது.

ஒன்று முதல் 100 வரை உங்களுக்கு எண்ணத் தெரியும்அல்லவா? அது பயிற்சியல்ல. அதை 100 முதல் 99, 98, 97 என்று ஒன்றுவரை குறைத்துக் கொண்டே பயிற்சி எடுங்கள். பின்னர் இரண்டு இரண்டாக குறைத்து 100, 98, 96, 94 என்று 2 வரை பயிற்சி செய்யுங்கள். அடுத்து மூன்று மூன்றாகவும், பின்னர் நான்கு, நான்காகவும், இறுதியில் 9 வரை கழித்துக் கொண்டே எண்ணி பயிற்சி பெற்றால் நினைவுத்திறன் படுவேகமாக செயல்படுவதை உணரலாம். எப்போது கேள்வி கேட்டாலும் உங்களால் எந்த எண்ணிலிருந்தும் கழித்துக் கொண்டே எண்கள் விடுபடாமல் சொல்ல முடிந்தால் நீங்கள் நினைவுத்திறனில் படுசுட்டியாக மாறிவிட்டீர்கள் என்று பொருள்.



7 வயது வரை உள்ள குழந்தைகள் 50 வரையும், 14 வயது வரை உள்ள குழந்தைகள் 100 வரையும் கணக்கில் எடுத்துக் கொண்டு வரிசைப்படி எண்களை குறைத்துச் சொல்லி நினைவுத்திறன் பயிற்சி மேற்கொள்ளலாம்.

மேற்கண்ட பயிற்சிகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றினால், நினைவுத்திறன் சிறப்பாக செயல்படும். இனி படித்த பாடங்கள் மறக்கவே மறக்காது அல்லவா?!

தினசரி பழக்கங்கள்

ஞாபக சக்திக்காக தினசரி செய்ய வேண்டிய சில பழக்கங்கள்…

வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு சரியான நேரத்திற்குத் தூங்கச் செல்வது மூளைக்கு போதிய ஓய்வைக் கொடுத்து நினைவுத்திறன் சிறப்பாக செயல்பட துணை செய்யும்.

அதேபோல சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதும், மூளை சிறப்பாக செயல்பட துணை செய்யும். மூளைக்கு அவசியமான ஒமேகா-3, ஒமேகா-6 உள்ளிட்ட சத்துப் பொருட்கள் நிரம்பிய உணவுகளை உங்கள் விருப்ப உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உடல் எடையை கட்டுக்குள் வைப்பதாக கருதி, உணவை குறைத்தால் அது மூளை இயக்கத்தை தடை செய்து ஞாபகசக்தி குறைவை ஏற்படுத்தலாம்.



ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் என்றிருக்காமல் அவசியமான வேலைகளை நினைவுபடுத்தி மனதில் பதிய வைப்பது சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

விளையாட்டுகள் மூளைக்கு சிறந்த பயிற்சியைத் தந்து நினைவுத்திறனை அதிகரிக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker